Wednesday, 3 June 2015

பாண்டிய வேந்தர்கள்



பாண்டியர்களின் பூர்வம் வன்னியென்னும் அரச வம்சத்தில் வந்தவர்கள் என்று பாரத அரிவம்சம் என்னும் புராணம் குறிப்பிடுகிறது.  அப் புராணத்தில் வன்னிய அரசர் வழிவந்தோர் மக்கள், பாண்டியன் கேரளன் சேரன் சோழன் என்று குறிப்பிடுகிறது.  மொழி ஞாயிறு தேவநேய பாவாணர் அவர்களும், முச்சுடராகிய சோம சூர்ய அக்னி பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். முச்சுடருக்கு மூலம் அக்னியாகும்.  பாண்டியர்கள் தங்களை "சந்திர வம்சம்" என்று கூறுகின்றனர்.  யதுவம்சமாகிய சந்திர வம்சம் "அக்னி குண்டத்தில்" இருந்து தோன்றியதை சாளுக்கியர்களின் வரலாறு நமக்கு தெரிவிக்கிறது.  சாளுக்கியர்களின் வம்சத்தவரான முதலாம் குலோத்துங்கச் சோழன், குலோத்துங்கச் சோழன் உலாவில் "சந்திர குலத்தவன்" (முகில் வண்ணன் பொன்துவரை 'இந்து மரபில்') என்றும் "அக்னி குலத்தவன்" (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்) என்றும் அழைக்கப்பெற்றார்.   அதைப்போலவே சாளுக்கியர்களின் கிளை மரபினர்களான ஹோய்சாலர்களும் அக்னியில் தோன்றியவர்களே ஆவர்.  புறநானூற்றில் (பாடல் 201 & 202) இதை பற்றிய குறிப்புகள்  உள்ளது. கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் "அருணாச்சலப்புராணம்", ஹொய்சால மூன்றாம் வீரவல்லாள தேவனை  "வன்னி குலத்தினில் வரு மன்னா"  என்றும்  "அனல் குலத்தோன்" என்றும் மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.


சந்திர குல பாண்டியர்களும் அத்தகைய அக்னியில் இருந்து தோன்றியவர்களே என்பதை "திருவிளையாடற் புராணமும்" மற்றும் "ஆலாசிய மான்மியமும்" குறிப்பிடுகிறது. 


மலையத்வஜ பாண்டியனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாமையால் "புத்திர காமேஸ்டி யாகம்" செய்தான்.  அந்த யாக அக்னியிடமிருந்து சாமள ரூபியாயும் கோமள வடிவுடையவளாயும் மீனாட்சியின் அம்சத்தைப் பெற்றவளாயும் மூன்று வயது நிறைந்த ஓர் பெண் உற்பவித்தாள் என்று ஆலாசிய மான்மியம் 8-வது அத்யாயம் 23-24-25 ஸ்லோகங்கள் கூறுகின்றனர். 


அதைப்போலவே திருவிளையாடற் புராணம் தடாதகைப் பிராட்டியார் திருஅவதாரப் படலம் 15-வது செய்யுள் குறிப்பிடுவது என்னவென்றால், மலையத்துவஜ பாண்டியன் செய்த யாக குண்டத்தில் இருந்து மூன்று வயதுடைய பெண் உற்பவித்தாள்.  அவ்வாறு உற்பவித்த தடாதகைப் பிராட்டியாரின் திருக் குமாரராகிய "உக்கிரகுமார பாண்டியன்" வன்னியில் உற்பவித்தவன் என்று திருவிளையாடல்  புராணம் மேருவைச் செண்டாலடித்த படலம் 36-வது செய்யுள் குறிப்பிடுகிறது.  "வன்னிச் செஞ்சுடர்க் கணெற்றி மன்னவன்" (எரி அனல் பொரியில் உதித்தவன்) என்று உக்கிரகுமார பாண்டியனை குறிப்பிடுகிறது.


இதன் மூலம் பாண்டிய மன்னர்கள் "வன்னியர்கள்" என்பதை அறியமுடிகிறது.  பாண்டிய மன்னர்கள் வன்னியர்கள் என்பதால் தான் "வன்னியர் புராணத்தை", மதுரை சுந்தரப் பாண்டிய மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவரான கிருஷ்ணப் பிள்ளை குமாரர் வீரப்பிள்ளை என்பார் எழுதியுள்ளார்கள். அது :-


"ஆதியானுறை கூடலின்மன்னவன்
சோதிசுந்தர பாண்டியன்துங்கமாஞ்
சாதிவன்னிய காதைபுராணமாய்
ஓதுவென்ன உளமகிழ்ந்தோதினன்"  (பாயிரம், பாடல் -15)


பொருள் :  ஆதியாகிய பரமசிவன் வளரப்பட்ட மதுராபுரிக்கரசனாகிய பிரகாசமுடைய சுந்தர பாண்டியனானவன் முன் மேன்மை பொருந்திய சாதியான வீரவன்னியருடைய கதையைச் சொல்லவேணுமென்று கேட்க என்னுடைய உள்ளமானது மகிழ்ச்சிகொண்டு சொன்னேன்.


வன்னிய புராணத்தை முதலில் சுருக்கமாக கம்பர் பாடியதாக (கம்பனுஞ்சுருக்கமாகக் கவியுரைத்தன்னிற்காதை) புலவர் அவர்கள் குறிப்பிடுவது என்பது "சிலை எழுபது" பாடலையாகும்.  புலவர் அவர்கள் தன்னை, கங்கைக் குலத்தில் பிறந்து பூமியில் பயிர்த்தொழில் செய்யும் வேளாளர் குலத்தில் கலப்பைக்கொடி பெற்ற தீரன் என்று  குறிப்பிடுகிறார்கள் (கங்கையின்மரபிலுற்றுக் காசினிற் பயிரைச்செய்யுந் துங்கவேளாளன்மேழிற் றுவசமும்பெற்றதீரன்).


பாண்டிய மன்னர்கள் "மாற வர்மன்" என்றும் "சடைய வர்மன்" என்றும் கல்வெட்டுகளில் அழைக்கப்பெற்றனர், அதாவது தங்களை "க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிட்டுக் கொண்டனர்.   திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிழப் பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோயில் கல்வெட்டு  "திரிபுவன சக்ரவத்திகள் ஸ்ரீ விக்கிரம க்ஷத்திரிய சிகாமணி நல்லூர்" என்று குறிப்பிடுகிறது.  விக்கிரம பாண்டியன் தன்னை "க்ஷத்ரிய சிகாமணி" என்று குறிப்பிட்டுக்கொண்டு தன் பெயரில் ஒரு ஊரையும் ஏற்படுத்தியுள்ளான்.  (ஆவணம் - 21, பக்கம் 65-66, கி.பி.13 ஆம் நூற்றாண்டு).   


தென்காசி செப்பேடு, வரகுண பாண்டியன் தன் குல குருவான காஞ்சிபுரம் பிரம குல அகோர சிவந்தபாதமூருடைய தேசிகர் அவர்களை தரிசனம் செய்து ஆசிர்வாதம் மற்றும் தீட்சை பெற்றார் என்று தெரிவிக்கிறது. அது  :-


"எங்கள் குலகுருவாகிய அகோர சிவந்தபாத மூருடைய தேசிகரவர்கள் தென்காசியில் விஸ்வநாதசுவாமி சன்னதியில் மடத்ததிபறாய் வந்திருப்பது தெரிந்து வந்து தெரிசனைசெய்து திருநீரு ஆசீர்பாதம் பெற்று தீச்சை செய்து உபதேசம் பெற்று குருமொழிப்படியிருக்க",  என்று தெரிவிக்கிறது. 


வரகுண பாண்டியன்   தன் குல குருவிடம் தீட்சை பெற்றதால் "தீட்சிதர்" என்று அழைக்கப்பெற்றான் என்று தெரியவருகிறது.  அச்செப்பேடு, தென்காசி பாண்டியனை "சந்திரபதி", "அக்னி கோத்திரத்தான்", "வன்னிய குலதிபதி", "வன்னிய வரகுண பாண்டியன்" என்று தெரிவிக்கிறது.


வன்னியர் பற்றி தெரிவிக்கும் திருவனந்தபுரம் (கேரளா) ஆவணம் தெரிவிப்பது என்னவென்றால்,  வன்னிய வீரர்கள் சிவந்தபாதமூருடைய தேசிகரவர்களுக்கு உகந்த ஊரான தென்காசியில் பாண்டிய மன்னனை தரிசித்தனர். அப்பொழுது அம் மீனவன் (பாண்டிய மன்னன்), வன்னியர்கள் கொடிய புலியை கொன்றதால் அவர்களுக்கு "மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பறாக்கிரமர்" என்ற பெயரும் "மீனக் கொடியும்", வெகுபல விருதுகளும் கொடுத்து, "தேவநல்லூர்" மற்றும் "கயத்தாறும்" ஆட்சி செய்யுங்கள் என்று கூறினார்கள்.  (தேவநல்லூரும் செய கயற்றாரு காவலாய் நீங்கள் காத்து வாருங்கள் என்று மீனவன் மான்பாயுரைத்தான்).


தென்காசி வரகுண பாண்டியனை செப்பேடு "செப்பு பரியான அக்னி குதிரை நடத்தியவன்" என்று குறிப்பிடுகிறது.  சிவகிரி, அழகாபுரி, ஏழாயிரம் பண்ணை, சமுசிகாபுரம், வேப்பங்குளம், தென்மலை ஆகிய    வன்னிய அரசர்களின் முன்னோர்கள் மதுரை பாண்டியன் அரசவைக்கு வந்து அரசர்க்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்தபோது, பாண்டியன் தமக்கு சமமாக ஆசனத்தில் அமர்வது எப்படி சரியாகும் என்று கேட்டான்.  அதற்கு அவர்கள்  "நாங்கள் அக்னி கோத்திரத்தை சார்ந்தவர்கள்" என்று தெரிவித்தனர்.  அப்படியானால் செப்புபரியான அக்னி குதிரை நடத்தவேண்டும் என்று பாண்டியன் தெரிவித்தான்.  அவர்களும் அக்னி குதிரை ஏறவே பாண்டியன் மிகவும் மகிழ்ந்து தங்கள் வம்சத்தார்கள் என்று அறிந்து விருதுகள் பல கொடுத்து தங்கள் ராஜியத்தின் சில பகுதிகளை ஆண்டு வரச்சொன்னான்.  சிவகிரி வன்னிய அரசர்களை "திக்கு விஜயம்" என்னும் இலக்கியம் "எரிஅனல் பொரியில் உதித்தவன்" என்று குறிப்பிடுகிறது. 


தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட "யேழாயிரம் பண்ணை பாளையப்பட்டு கைபீது" மற்றும் "அழகாபுரி சமீந்தார் பூறுவோத்திரம் கைபீது" போன்றவற்றில் வன்னிய அரசர்கள் தங்களது பூர்வ வரலாற்றை விளக்கி சொல்லியுள்ளனர்.  சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான, "உமை பன்றிக்கு பால் கொடுத்த படலத்தோடு" தொடர்புபடுத்தி சொல்லியுள்ளார்கள்.  இந்த செய்தி தமிழ் இலக்கியமான "கல்லாடத்திலும்" குறிப்பிடப்பட்டுள்ளது.  பன்றி முகத்தோடு மனித உருவங்களும், பன்றி வடிவில் உமை குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் காட்சியும் சுந்தரர் அவதரித்த தலமான விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர்க் கோயிலில் சிற்ப வடிவில் உள்ளது. 


சந்திர குல வம்சமான யதுவம்சத்தில் (யாதவர்) தோன்றிய க்ஷத்ரிய "சாளுக்கியர்களின்" இலச்சினை "பன்றி" யாகும்.  சாளுக்கியர்களின் மரபினர்களான  யதுகுல விஜயநகர பேரரசர்களின் இலச்சினையும் "பன்றி" யாகும்.  இவர்கள் சிந்து சமவெளி (துவாரகை) பகுதியில் இருந்து வந்த "வேளிர்கள்" ஆவர்.  மகா விஷ்ணுவினுடைய கூர்ம அவதாரமே (பன்றி அவதாரம்) வேளிர்களின் சின்னமாகும்.  பண்டைய துவாரகையினுடைய ஒரு பகுதி "கூச்சரம்" (பன்றி) என்று அழைக்கப்பெற்றது.  அது இன்றைய "குஜராத்" மாநிலமாகும்.  அது சிந்து சமவெளி பகுதியின் ஒரு அங்கமாகும். 


சந்திர குல பாண்டியர்களும் (யதுவம்சம்)  துவாரகையில் இருந்து  வந்தவர்களே ஆவார்கள்.  துவாரகையில் இருந்து அரசர்களும் வேளிர்களும் தமிழகம் வந்ததாக நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரயுரையிலும் மற்றும் அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்கள். புறநானூறு பாடல்கள்  (201 & 202) நமக்கு இக் கருத்தை வலியுறுத்துகிறது.  


யதுவம்சத்தில் (யாதவர்)  தோன்றிய ஹொய்சால வன்னிய அரசன் மூன்றாம் வீர வல்லாள தேவனை, மாற வர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியன் (கி.பி. 1308 - 1342) "மாமா" (மாமடி வல்லாள தேவன்) என்று திருவண்ணாமலை கல்வெட்டில் குறிப்பிடுகிறான் (ஆவணம்-24, பக்கம்-141).   எனவே இவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது உறுதியாகிறது.


மேற்குறிப்பிட்ட பல அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு பார்க்கையில் பாண்டிய மன்னர்கள்  "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.


----- xx ----- xx ----- xx -----   


குறிப்பு :  தென்காசி கோயிலில் உள்ள பாண்டியர்களின் சிலையையும், கேரள அரசு காப்பகத்தில் உள்ள வன்னியர் ஆவணத்தையும் புகைப்படங்களாக கொடுத்துள்ளேன்.