காடவ வேந்தனான மூன்றாம் நந்திவர்ம பல்லவன் (கி.பி.846 - 869) மீது பாடப்பட்ட நூலே "நந்திக் கலம்பகம்" ஆகும். மூன்றாம் நந்திவர்ம பல்லவனின் திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு ஒன்று அவரை "பாரத்வாஜ கோத்ர பிரம்ம க்ஷத்ரிய குலோத்பவ" என்றும் "பல்லவ மாமறைத் தோன்றிய வனி வேந்தன்" என்றும் குறிப்பிடுகிறது(1).
வன்னிய குல காடவ கோப்பெருஞ்சிங்கப் பல்லவனின் வம்சத்தைச் சேர்ந்த மூன்றாம் நந்திவர்ம பல்லவனை, நந்திக் கலம்பகம் "வேளிர் குல மன்னர்க்கு எல்லாம் மன்னன்" என்றும் "வேளிர் குலமான சந்திர குலத்திற்கு தீபம்" என்றும் குறிப்பிடுகிறது.
"நங்கள்கோத் தொண்டை வேந்தன்
நாமவேல் மன்னர்க் கெல்லாம்
தங்கள்கோன் அங்க நாடன்
சந்திர குல பிரகாசன்"(2)
எங்களது மன்னனாகிய தொண்டை வேந்தன் நந்திவர்ம பல்லவன், நாம வேளான வேளிர் குல மன்னர்க்கு எல்லாம் மன்னன் ஆவான். எங்கள் கோன் நந்திவர்ம பல்லவன், அங்க தேசத்தை சேர்ந்தவன். அவன் சந்திர குலத்திற்கு தீபம் போன்றவன்.
நந்திக் கலம்பகம் குறிப்பிடும் "நாமவேல் மன்னர்" என்ற சொல்லானது, சோழர் காலக் கல்வெட்டு ஒன்றில் "நாம வேள் கங்கன்" என்று பயின்று வந்துள்ளது(3). கங்கர்கள் வேளிர் மரபினர் ஆவர்.
மேலும் நந்திக் கலம்பகம் குறிப்பிடும் "அங்க நாடு" என்பது மகாபாரத சந்திர குல க்ஷத்ரியர்களான கௌரவர்கள், கர்ணனுக்கு அரசாட்சி செய்வதற்காக கொடுத்த தேசமாகும். மூன்றாம் நந்திவர்ம பல்லவன் "அங்க தேசத்தை சேர்ந்தவன்" என்று குறிப்பிடப்படுவது என்பது, "பல்லவர்கள் மகாபாரத க்ஷத்ரியர்களின் வம்சத்தவர்கள்" என்பதாகும். பல்லவர்களின் மாமல்லபுரம் சிற்பங்களே இதற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குகின்றன.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட நூலான, "தமிழ்நாட்டு வரலாறு பல்லவர் - பாண்டியர் காலம்" என்ற நூலின் பக்கம்-192 இல், "மூன்றாம் நந்திவர்மன் சந்திர குலத்தைச் சேர்ந்தவன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பல்லவர்கள் சந்திர குலத்தைச் சேர்ந்த வேளிர் மரபினர்கள் என்பது உண்மையாகிறது. மேலும் வன்னியர்கள், மகாபாரத க்ஷத்ரியர்களின் வம்சத்தவர்கள் என்பதும் தெளிவாகிறது.
Foot Notes :
(1) S.I.I. Vol-XII, No.48.
(2) நந்திக் கலம்பகம், பாடல்-39.
(3) காஞ்சிபுரம் மாவட்ட கல்வெட்டுகள், தொடர் எண் : 19/2004. வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டு (கி.பி.1067).
----- xx ----- xx ----- xx -----
By : N. Murali Naicker