Sunday, 9 August 2015

நரசிங்க முனையதரையர்

திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர் ஆவார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிவனடியார்க்கு செய்யும் தொண்டையே சிவத் தொண்டாகக் கருதியவர். திருவாதிரை நாள்தோறும் சிவனடியார்களுக்கு திருவமுது செய்வித்து அவர்களுக்குத் தனித்தனியே நூறு பொன் கொடுத்து வந்தார்கள். அவ்வாறு செய்து வரும் நாளில் தூர்த்த (வஞ்சகன் அல்லது காமுகன்) வேடம் தரித்த ஒருவன், திருநீறு தரித்து அடியார் குழுவில் இணைந்து கொண்டான். அவனை அனைவரும் இகழ்ந்து ஒதுக்கினர். இது கண்ட நரசிங்க முனையதரைய நாயனார் அவர்கள், திருநீறு தரித்த காரணத்திற்காக அந்த தூர்த்தனிடம் இன்மொழிகள் பேசி இருநூறு பொன் கொடுத்து அனுப்பினார்கள்.


நம்பியாரூரை (சுந்தரர்) மகன்மை முறையில் வளர்த்த பேரு பெற்ற இவர் சிவப்பணியாற்றி சிவகதி அடைந்தார்கள். "திருமுனைப்பாடி நாடாளுங் காவலனார் நரசிங்க முனையரையர்" என்றும் "குலமரபினர சளித்து" என்றும் "பெருந்தகையா ரிருந்தரசு புரந்து" என்றும் "தெம்முனைகள் பலகடந்து" என்றும் "கொற்றவனார்" என்றும் புலவர் சேக்கிழார் அவர்கள் நரசிங்க முனையரையரை "க்ஷத்ரியர்" என்று குறிப்பிட்டுள்ளார்கள். உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் "குறுநில மன்னராக" நரசிங்க முனையரையரைக் குறிப்பிடுகிறார்கள். முனையதரையர்கள் ஆண்ட நாடு "முனைப்பாடி நாடு" எனப்பட்டது. அதாவது "திருமுனைப்பாடி நாடு" எனப்பட்டது.


இத்தகைய பெருமை வாய்ந்த முனையதரைய மரபினர்கள் யார் என்பதை, விஜயநகர பேரரசர் ஸ்ரீ அச்சுத தேவ மகாராயரின் (கி.பி.1531) எலவானாசூர் (இறைவாநரையூர்) கோயில் கல்வெட்டு நமக்கு தெரிவிக்கிறது. இறைவாநரையூரில் பன்னிரண்டு பற்றில் நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும், திருக்கோவலூர் உடையார் திருநரசிங்கமுடைய நயினார் கோயிலில் ஸ்ரீ சண்டேசுர நயினார் ஸ்ரீ பண்டாரத்துக்குத் தருமசாசனப் பட்டயம் கொடுத்து நரசிங்க முனையதரையப் பெருமாள் நயினாருக்கு பொன் தானமும் கொடுத்து பூஜை மற்றும் இன்னசில நற்காரியங்களைச் செய்ய கட்டளையிட்டிருக்கிறார்கள்.


விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருநாவலூர்ப் பகுதி "வழுதிலம்பட்டு உசாவடி" என்று கல்வெட்டில் அழைக்கப்பெற்றது. அது :-


"வழுதிலம்பட்டு உசாவடி புவனேகவீரந்பட்டண சீமை
கெடிலத்துக்கு தெர்க்கு திருமுனைப்பாடி நாடு
பன்னிரண்டு பற்றில்"

"வழுதிலம்பட்டுச் சாவடி நாடும் கரணிக்கரும்
பரிவாரமும் தொண்டைமானார் கச்சிராயர்
கச்சிராயரும்"


"வழுதிலம்பட்டு உசாவடி" என்றும் "திருமுனைப்பாடி நாடு பன்னிரண்டு பற்றில்" என்றும் அழைக்கப்பெற்ற முனையதரையர்களின் திருநாவலூர் காரணிகர்களாக "பரூர் கச்சிராயர்கள்" விளங்கியிருக்கிறார்கள்.


மேற்குறிப்பிட்ட விஜயநகரப் பேரரசரின் கி.பி.1531 ஆம் ஆண்டுக் கல்வெட்டில், பன்னிரண்டு பற்றில் நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும் "நரசிங்க முனையதரைய நயினாரை" கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-


"பன்னிரண்டு பற்றிலும் நாங்கள் இருப்பதாக பதிஞ்சு
கொண்டு எங்கள் நயினார் நரசிங்கமுடைய நயினாற்கு
சறுவமானிம் மாக"


வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தை சேர்ந்த, பரூர் அரசரான நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும், 63 நாயன்மார்களுள் ஒருவரான நரசிங்க முனையதரைய நயினாரை "எங்கள் நயினார்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள். இது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த சான்றாகும். மேலும் அக் கல்வெட்டில், பன்னிரண்டு பற்று நாட்டவரும் தங்களது நாட்டை "எங்கள் சீர்மை" என்றே குறிப்பிடுகிறார்கள்.


சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வரலாற்றில் பெண்ணாகடம் என்ற நூலில் "கச்சியராயர்" என்ற தலைப்பில் கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-


"நாட்டவர் என்பது கச்சிராயரையே குறிக்கும். இவர்களே 15-16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் அரசாட்சி புரிந்தனர் எனலாம்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.


எனவே "பன்னிரண்டு பற்றில் நயினார் கச்சிராயரும் நாட்டவர்களும்" என்பது "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தையே" குறிப்பிடுவதாகும். இதை மெய்பிக்கும் விதமாக "தொண்டைமானார் கச்சிராயர் கச்சிராயரும்" என்ற கல்வெட்டு வரிகள் நமக்கு சான்று பகர்கின்றது. விஜயநகர பேரரசர் ஸ்ரீ அச்சுத தேவ மகாராயரின் (கி.பி.1531) எலவானாசூர் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்படும் பரூர் அரசரான "நயினார் கச்சிராயர்" அவர்களைப் போலவே இரண்டாம் புக்கண்ண உடையார் காலத்திய (கி.பி.1398) விருத்தாசலம் கல்வெட்டில் "நயினார் கச்சிராயர்" என்ற பரூர் அரசர் குறிப்பிடப்படுகிறார்கள். எலவானாசூர் கோயில் கல்வெட்டில் மேலும் பல கச்சியராய அரசர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் :-


"பருவூர் உடையார் தேவர் கச்சியராயர் பிள்ளைகளில் காளத்திநாதர்" (மாற வர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியன் காலம், கி.பி.1313).

"பருவூர் கச்சியராயர் பிள்ளைகளில் காளத்திநாதன்" (வீர கம்பண்ண உடையார் காலம், கி.பி.1372).

"தொண்டைமானார் கச்சிராயர் கச்சிராயரும்" (ஸ்ரீ வீரப் பிரதாப விசயராய மகாராயர் காலம், கி.பி.1446).

"பல்லவநாந இராச நாராயணக் காடவராயன்" (சோழர்கள் காலம்).

"கூடலூர் அரசநாராயணன் ஏழிசை மோகனாந ஜநனாத கச்சியராயநேன்" (சோழர்கள் காலம்).

"கூடலூர் முனையதரையன் அசல குலோத்துங்கனான ராஜ ராஜக் காடவராயனேந் (சோழர்கள் காலம்).

"சகல புவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ கோப் பெருங்சிங்க தேவர்" (சோழர்கள் காலம்).


போன்றோர்கள் ஆவார்கள். கூடலூர் முனையதரையன் அசல குலோத்துங்கனான ராஜ ராஜக் காடவராயன் என்ற அரசர் "முனையதரையன்" என்று அழைக்கப்படுவதைப் போல, முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சி காலத்தில் பெருங்கானூர் நாட்டுக் கூடலூரைச் சேர்ந்த "அரையன் முனையன் மோகனனான ராஜேந்திர சோழக் காடவராயன்" என்ற காடவராய அரசரும் "முனையதரையன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் "பரூர் கச்சியராயர்களின்" முன்னோர்கள் ஆவார்கள். விருதாச்சலம் அருகில் உள்ள இப் பரூர் இன்று "மூகாசாப் பரூர்" என்று அழைக்கப்படுகிறது. சோழ மன்னர்களின் மிக நெருங்கிய உறவினர்களான இக் காடவராயர்கள் தங்களை "முனையதரையர்" என்றும் 63 நாயன்மார்களுள் ஒருவரான நரசிங்க முனையதரைய நயினாரை "எங்கள் நயினார்" என்றும் குறிப்பிடுவதன் மூலம், "முனையதரையர்கள்" காடவராயர்களின் வழி வந்தவர்கள் அல்லது உறவினர்கள் என்பதை சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைவது காடவராயர்களுக்கும் மலையமான்களுக்கும் இருந்த மிக நெருங்கிய திருமண உறவே ஆகும்.


நரசிங்க முனையதரைய நயினார் அவர்கள் "திருக்கோவலூர் உடையார் நரசிங்கமுடைய நயினார்" என்று கல்வெட்டில் மிகத் தெளிவாக குறிப்பிடப்படுவதன் மூலம்  அவர் "மலையமான் மரபினர்" என்று பெறப்படுகிறது. சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகளில் மலையமான் மரபினர்கள் தங்களை, "வன்னியர்", "வன்னிய மக்கள் நாயன்", "வன்னிய நாயன்", "பள்ளி" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார்கள். மலையமான்கள் தங்களை "பார்கவ கோத்திரத்தினர்" என்றும் "பார்கவ குலத்தினர்" என்றும் சோழர்கள் காலத்து கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த உடையார்பாளையம் அரசர்களும், கடலங்குடி 'ஆதி கலிங்கராய உடையார்' பாளையக்காரர்களும் தங்களை "பார்கவ கோத்திரத்தினர்" என்றே குறிப்பிடுகிறார்கள்.


தொல்லியல் அறிஞர் திரு. எஸ். இராமச்சந்திரன் அவர்கள், பள்ளி குல காடவராய அரசர்கள் தங்களை "அசல (மலையர்) குல உத்தவன்" என்று சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடுவதாக சான்றுகளைத் தெரிவித்திருக்கிறார்கள். அது :-


"இறையானனயூருக்கு (எலவானாசூருக்கு) அருகிலுள்ள கூடல் என்ற ஊரைச் சேர்ந்த மோகன் ஆட்கொண்டான் என்ற பெயருடைய குறுநிலத் தலைவன் கி.பி.1129 இல் விக்கிரம சோழனிடத்துப் படைத் தலைவனாகவும், அதிகாரியாகவும் இருந்தான். இவன் இப்பகுதியில் வேளாண்மையை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளான். செங்குறிச்சி என்ற ஊரிலுள்ள பாசன ஏரிக்கு இவன் மதகு அமைத்தது குறித்துக் கல்வெட்டு உள்ளது. இவனது வம்சத்தவர் சோழ அரச குலத்துடன் மிகவும் நெருக்கம் எய்தி, மண உறவும் கொண்டனர். மோகன் ஆட்கொண்டானின் கொள்பெயரனே, கூடல் பள்ளி என்றும், அசல (மலையர்) குல உத்தவன் என்றும், காடவர் குல திலகன் என்றும், பல்லவ குல பாரிஜாதன் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டுக்கொள்ளும் கோப்பெருஞ்சிங்கன் ஆவான். இவன் சோழ குலப் பெண்ணைத் தில்லையில் வைத்து மணம் புரிந்தான்." என்று தெரிவிக்கிறார்கள்.


முனையதரையர்கள் வன்னியர்கள் தான் என்பதை மெய்ப்பிக்க மேலும் ஒரு சான்று கிடைக்கிறது. முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் குறிப்பிடும் அச் சான்று :-


"கி.பி. 1394 இல் எழுதப்பெற்ற ஒரு கல்வெட்டு இவ்வூர் (பெண்ணாகடம்) மேல்பிடாகை கொத்திட்டையில் வன்னிய இனத்தைச் சேர்ந்த 'முனியன் கச்சிக்கு வாய்த்த முனையதரையன்' என்பவருக்கு 3750 குழி நிலம் உரிமை உடையதாக இருந்ததைக் குறிப்பிடுகிறது. இவர் இப்பகுதியை ஆட்சி செய்த வன்னிய குலத்துச் சிற்றரசனான 'ஸ்ரீ ரெங்கநாதர் ஆன வலங்கைமீகாம வாணகோவரையன்' என்பவரின் அடியான் ஆவார்". என்று குறிப்பிட்டுள்ளார்கள்.


இதைப்போலவே மேலும் சில சான்றுகள் "முனையதரையர்களைப்" பற்றிக் குறிப்பிடுகிறது. அது :-


"விக்கிரம சோழனின் எறும்பூர் கல்வெட்டு ஒன்று 'திருமாம்பலம் சூரியான முனையதரையப் பல்லவராயன்' என்ற தொண்டை மண்டலத்து 'சாளுக்கியரைப்' பற்றி குறிப்பிடுகிறது".

"குறுக்கைக் கூற்றத்துச் சிக்காட்டுப் பற்று அதகூரில் நல்லுருடையான் கூத்தன் அதியமான் சேவகனான நரசிங்க முனையதரையர்" (எலவானாசூர் கல்வெட்டு, கி.பி.1362).

"அதகூர் நல்லுருடையான் சேவகன் இராசநாராயண நரசிங்க முனையதரையன்" (எலவானாசூர் கல்வெட்டு, கி.பி. 16 ஆம் நூற்றாண்டு).


இச் சான்றுகளும் வன்னியர்களைத் தான் குறிப்பிடுகிறது என்பதை குறிப்பால் உணரமுடிகிறது. இன்றும் வன்னியர்களில் பலர் "முனையதரையர்", "முனையரையர்", "நரசிங்கராயர்" போன்ற பட்டங்களை தாங்கி வாழ்ந்து வருகிறார்கள். எனவே "நரசிங்க முனையதரைய நாயனார்" அவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சார்ந்த மன்னர் என்பது முற்றிலும் உண்மையாகிறது. இது மிகத் தெளிவான சான்றுகளின் அடிப்படையில் அமைந்த மிகச் சரியான முடிவாகும்.


----- xx ----- xx ----- xx -----

குறிப்பு : தாராசுரம் கோயிலில் உள்ள சோழர்கள் காலத்து "நரசிங்க முனையதரைய நாயனார்" அவர்களின் சிற்பம் இங்கே புகைப்படமாக கொடுக்கப்பட்டுள்ளது.

----- xx ----- xx ----- xx -----























Saturday, 8 August 2015

பரத்வாஜ கோத்திரம்


தொல்லியல் அறிஞர் திரு. ராமசந்திரன் அவர்கள் என்னிடம் தெரிவித்தது என்னவென்றால், வன்னிய சமூகத்தை சேர்ந்த சம்புவராய மன்னரான, 'சகல புவன சக்கரவர்த்தி ஸ்ரீ ராஜ நாராயண சம்புவராயர்' அவர்கள் வந்தவாசி கல்வெட்டில் உள்ள சமஸ்கிருத பகுதியில், "பரத்வாஜ கோத்ரஸ்சிய ஜம்பு கேஸஸ்ய சாசனம்" என்று குறிப்பிடப்படுகிறார்கள். "பரத்வாஜ கோத்திரம்" என்று வருவதால் சம்புவராய மன்னர்கள் "பல்லவ மரபினர்கள்" என்பது உறுதியாகிறது என்று சொன்னார்கள்.

சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகள் சம்புவராய மன்னர்களை "பல்லவர்கள்" என்றே குறிப்பிடுகிறது. சம்புவராயர்களது அரச சின்னமும் கொடியும் பல்லவர்களின் சின்னமான "காளையே" ஆகும்.

சம்புவராய மன்னர்களால் ஆதரிக்கப்பெற்ற "இரட்டைப் புலவர்கள்" தங்களுடைய "ஏகாம்பரநாதர் உலாவில்" சம்புவராய மன்னரை "தத்துபரி பல்லவன் சம்பு குல பெருமாள்" என்று குறிப்பிடுகிறார்கள்.

பல்லவர்களான "காடவராய வன்னிய மன்னர்களும்" மற்றும் "சம்புவராய வன்னிய மன்னர்களும்" உறவினர்கள் என்பதை ஆறகளூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது. காடவராய மன்னர்களும் சோழ மன்னர்களும் மிக நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். சம்புவராய மன்னர்கள் சோழ மன்னர்களைப் பற்றி காஞ்சிபுரம் கல்வெட்டில் குறிப்பிடும் பொழுது "எங்கள் வம்சம்" (க்ஷத்ரியர்) என்றே குறிப்பிடுகிறார்கள்.

பல்லவ மன்னர்களும் சோழ மன்னர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்" என்றே குறிப்பிடுகிறார்கள். திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு, பல்லவ மன்னன் நந்தி வர்மனை "பிரம க்ஷத்ரிய குலோத்பவம்" என்று சொல்கிறது. அதாவது "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று சொல்கிறது. அதே போல சோழ அரசியும் கங்க அரசன் "துர்வினிதனின் (550-600 A.D) ராணியை, "ப்ரம க்ஷத்ரிய" என்று சொல்கிறது. அது :-

"உரகபுராதிப ப்ரம க்ஷத்திரிய சோழ குல திலக ஸ்ரீ
தக்த சரணசந்தான பரசூதா" (Epigraphia Indica, Vol-XVIII, No.4).

மேற்குறிப்பிட்ட உறுதியான சான்றுகளின் மூலம் வன்னியர்கள் "க்ஷத்ரிய சமூகத்தவர்கள்" என்பதும் அவர்கள் "ஆண்ட பரம்பரை" என்பதும் உண்மையாகிறது.

----- xx ----- xx ----- xx -----