திண்டுக்கல்லிருந்து கரூர் செல்லும் வழியில் பண்டைய முக்கியப் பெருவழியில் அமைந்த ஊர் "வேடசந்தூர்" ஆகும். இவ்வூர் தமிழ் நாட்டின் வடபகுதியிலிருந்து பழனி செல்லும் பயணிகள் தங்கும் முக்கிய இடமாக இருந்துள்ளது. இவ்வூரில் பழங்காலக் கோட்டை ஒன்று இருந்து அழிந்துள்ளது. இதற்கான தடயங்கள் ஹசரத் சயீது அரபு அப்துர் ரஹிமான் என்ற பெரியார் அடங்கிய தர்காவின் அருகில் காணப்படுகிறது.
இவ்வூரின் பழையப்பெயர் "பெரும்பள்ளியாகும்". இதுவே இன்று "பெரும்புள்ளி" என்று மருவி வழங்குகிறது. இவ்வூர்ப் பாசன ஏரியின் கரையில் அமைந்த பாறையிலுள்ள கி.பி.9-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அவ்வேரியைப் "பெரும்பள்ளி பெருங்குளம்" என்று குறிப்பிடுகிறது. பெரும்புள்ளிக் கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறையிலுள்ள மற்றொரு 9-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இப்பகுதியை ஆண்ட நாடாள்வார்கள் பற்றி முக்கிய செய்திகளை தருகின்றது. முற்காலப் பாண்டியர்களுக்குக் கட்டுப்பட்டுப்பெரும்பள்ளியைச் சுற்றியிருந்த "பள்ளிநாடு" என்ற சிறுநாட்டுப் பிரிவின் தலைவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். பாண்டியரின் அதிகாரிகளாகவும், படைத்தலைவர்களாகவும் விளங்கியவர்கள் இந்நாடாள்வார்கள் "பள்ளி வேளான்கள்" என்று இவர்கள் அழைக்கப்பட்டனர். இப் "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்), வன்னிய குல க்ஷத்திரிய மரபினை சேர்ந்தவர்கள் ஆவர்.
கி.பி.8-9 ஆம் நுற்றாண்டுகளில் பாண்டியர்க்குப் பல்வகையிலும் துணையாய் நின்ற நான்கு "பள்ளி வேளான்களின்" (வேளிர்களின்) பெருமைகளைப் பெரும்புள்ளி கன்னிமார் கோயில் அருகிலுள்ள பாறைக் கல்வெட்டு தொகுத்துக் கூறுகிறது. இவர்களில் கல்வெட்டின் இறுதியில் குறிப்பிடப்படும் "பள்ளி வேளான் நக்கன்புள்ளன்" இரண்டாம் வரகுணபாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இவனும் இவன் மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனும்" சேர்ந்து பூமிதானமாக நிலம் ஒன்றினைக் கோயில் ஒன்றுக்கு அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
இக்கல்வெட்டில் பின்வரும் நான்கு "பள்ளி வேளான்கள்" (வேளிர்கள்) குறிப்பிடப்படுகின்றனர் :-
"பள்ளி வேளான்"
"பராந்தக வேளான்"
"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்"
"பள்ளி வேளான் நக்கன்புள்ளன்"
(திண்டுக்கல் மாவட்டத் தொல்லியல் கையேடு-2007)
இவ்வழிமுறையில் மூத்தவன் "பள்ளி வேளான்" முற்பாண்டிய மன்னன் முதலாம் இராஜ சிம்மன் காலத்திய (கி.பி. 730 - 768) குறுநில மன்னன். இவன் இராஜ சிம்மனுக்கு ஆதரவாகக் குழும்பூர் போரில் பங்கு கொண்டு பல்லவர்களை வெல்ல உதவினான் என்று பெரும்புள்ளிக் கல்வெட்டும், வேள்விக்குடிச் செப்பேடும் கூறுகின்றன.
"பள்ளி வேளானின்" மகன் "பராந்தக வேளான்" என்பவன் சோழநாட்டில் உள்ள இடவை என்ற ஊரில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடைய வரகுணனுக்கு (கி.பி. 768 - 815) வெற்றியைத் தேடித் தந்தவன். இப்போர் பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் நடைபெற்ற போராகும். இப்போரில் பங்கு கொண்ட "பராந்தக வேளானின்" மகன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன் (கி.பி. 815 - 862) என்ற பாண்டியனிடத்துப் பணிபுரிந்தவன். இம்மன்னனுக்காக இடவை, குடமூக்கு (கும்பகோணம்) முதலிய இடங்களில் பல்லவர்களோடு நடைபெற்ற போர்களில் பங்கு கொண்டவன் "அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கன்" ஆவான். மேலும் இவன் ஆய்வேள் என்ற மலைநாட்டு மன்னருடன் விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினத்தில் பாண்டியன் நடத்திய போரில் படைத்தலைவனாகக் கலந்துகொண்டான் என்று பெரும்புள்ளி கல்வெட்டு கூறுகிறது. விழிஞம் என்ற கடற்கரைப் பட்டினம் இன்று அரபிக்கடற்கரையில் திருவனந்தபுரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
"அண்டவேளான் குறும்பராதித்தன் புள்ளன்நக்கனின்" மகன் "பள்ளி வேளான் நக்கம்புள்ளன்" ஆவான். இவன் இரண்டாம் வரகுணன் சிங்கள மன்னருடன் சாளக்கிராமம், சென்னிலம் முதலிய இடங்களில் நடத்திய போர்களில் யானைப்படையைக் கொண்டு சென்று உதவி வெற்றியைத் தேடித் தந்தவன் என்று பல அறிய செய்திகளைப் பெரும்புள்ளிக் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
"பள்ளிவேளான் நக்கன்புள்ளனும்" அவன் மகன் "புள்ளன் நக்கனும்" இவ்விருவரும் சேர்ந்தே வடமதுரைக்கு அருகிலுள்ள இராமநாதபுரத்தில் நீர்ப்பாசன ஏரி ஒன்றை உருவாக்கி அதற்குப் புள்ளனேரி என்றே பெயரிட்டனர். ஏரியை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட தச்சனுக்குச் காணியாகப் "பள்ளி நாட்டின்" இரண்டு பகுதிகளிலுமுள்ள ஊர்குளங்களிலிருந்து தலைநீர் பாயும் பதக்கு விதைநெல்பாவும் நிலம் அளிக்கப்பட்டது என்று இராமநாதபுரம் வரகுணபாண்டியன் கல்வெட்டு தெரிவிக்கிறது.
வேடசந்தூர் வட்டம் பழைய கரட்டுப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோயில் அருகில் இரண்டாக உடைந்து போன கி.பி.10 ஆம் நூற்றாண்டு நடுகல் ஒன்று உள்ளது :-
"ஸ்ரீ அரையரெள்ளி கோய்த்திரனான
மதுராந்தகப் பள்ளி வேளான்
பள்ளி நாட்டு நிரை போகயில் பட்டான்" (கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40).
பள்ளி நாட்டு ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்து சென்ற போது மதுராந்தகப் பள்ளி வேளான் என்ற வீரன் சண்டையிட்டு இறந்தான். அவன் தன்னை "அரசபள்ளி கோத்திரம்" என்று அழைத்து கொண்டிருக்கிறான். வேடசந்தூர் பகுதியில் பிற்கால "பள்ளி வேளான்" கல்வெட்டுகள் காணப்படுகிறது.
"பள்ளி வேளான்கள்" பாண்டிய மன்னர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்துள்ளனர். பாண்டியர்கள் மேற்கொண்ட பல போர்களில் இவர்கள் தளபதிகளாக இருந்து பெரும் வெற்றியை அவர்களுக்கு தேடித்தந்துள்ளனர். மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடியில் உள்ள கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டு ஒன்று "பள்ளி தறையன்" என்பவனை பற்றி குறிப்பிடுகிறது. அவன் "பள்ளி வேளான்களின்" உறவினனாக இருக்ககூடும்.
எறியோடு கோணக்க முத்துவல்லக் கொண்டம நாயக்கர் காலத்தில் பெரும்பள்ளியில் கோட்டை ஒன்று இருந்தது இதனை முத்துவல்ல கொண்டம நாயக்கர் சண்டையிட்டுக் கைப்பற்றி விரிவுபடுத்தி ஆண்டார் என்று "எறியோடு பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது. அவர் கைப்பற்றிய கோட்டை "பள்ளி வேளான்களின்" கோட்டையாகும்.
-----x-----x-----x-----